Monday, May 22, 2017

வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு நீதிமன்றிடம் அனுமதி கோருகிறார் யோஷித!

வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கூறி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 23ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
 
நிதி மோசடி குற்றச்சாட்டில் பிணை வழங்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
எவ்வாறாயினும் சிகிச்சை பெறுவதற்காக இரண்டு மாத காலத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் வௌிநாடு செல்வதற்கான தடையை நீக்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தை கேட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Saturday, May 13, 2017

மஹிந்த – மோடி சந்திப்பு!


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
இந்தச் சந்திப்பு (11) இரவு இடம்பெற்றதாக மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
 
இந்திய பிரதமரின் வருகையின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும், திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வந்த நிலையிலேயே இந்திய பிரதமரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

14வது சர்வதேச வெசாக் வைபவம்!

ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான 14வது சர்வதேச வெசாக் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(12) காலை ஆரம்பமாகியது.
இந்த வெசாக் தின வைபவத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் 80 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 1000 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
 
பௌத்த போதனைகளின் அடிப்படையில் சமூக நீதியின் மூலம் உலக சமாதானத்தை நிலை நாட்டுதல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச வெசாக் தின நிகழ்வில் ஞாபகார்த்த முத்திரை ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.
 
இதேவேளை இந்த நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Friday, May 12, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்‌ஷ மோடியுடன் சந்திப்பு!

 இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பு இந்தியப் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் இருக்கவில்லை என்ற போதிலும் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதற்கிணங்க சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்து கூறியுள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற இராப்போசன விருந்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை இந்திய பிரதமர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பிரீஸும் கலந்து கொண்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சந்திப்பு மிகவும் ந
ட்பு ரீதியாக காணப்பட்டதாக இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சாந்து கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் தற்போதும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற உதவிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சீன நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நங்கூரமிட அரசு நிராகரிப்பு!

சீனாவினது நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைப்பதற்கு இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தும் இலங்கை அரசு அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இலங்கை வருகை தந்துள்ள இந்நிலையில் அடுத்த வாரம் தங்கள் நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைப்பதற்கு சீனா இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது.
 
இது குறித்து பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சீனா எங்களிடம் அனுமதி கேட்டது. ஆனால் நாங்கள் அதனை மறுத்துவிட்டோம். இது ஒரு சிக்கலான விவகாரம்” என தெரிவித்தார்.
 
கடந்த 2014-ம் ஆண்டு இதே போல் சீனா அதன் நீர் மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்க அனுமதி கேட்டது. அப்போதைய ராஜபக்ஷ அரசு அதற்கு அனுமதி வழங்கியது. இது குறித்து இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கவலை தெரிவித்தது.
 
தற்போது பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் கோரிக்கையை இலங்கை நிராகரித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Sunday, May 7, 2017

வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற புலிகளின் முக்கிய தலைவர்கள் தற்போது இலங்கையில்!

இறுதிக்கட்ட போரின் போது வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தற்போது இலங்கை வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
புலிகளின் புலனாய்வு மற்றும் ஆயுத படை தலைவர்கள் உட்பட புலி உறுப்பினர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகை தருவதாக இந்திய உளவுத்துறை, இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவு பிரதானியாக செயற்பட்ட ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் அண்மையில் மன்னார் வந்து சென்றதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
 
இந்தியாவில் இருந்து மீனவப் படகு மூலம் ஜெயந்தன் மன்னார் வெடிகல்தீவு ஊடாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இறுதிக்கட்ட போரின் போது புதுமாத்தலனிலிருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்ற ஜெயந்தன் பின்னர் லண்டன் சென்றுள்ளதாகவும், அந்த நாட்களில் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்திருந்தனர்.
 
ஜெயந்தன் இதுவரையிலும் இலங்கையை விட்டு வெளியே செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தற்போது புலனாய்வு பிரிவுகளினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த வாரம் பாதுகாப்பு சபையினுள் இந்தியாவின் அறிவிப்பு மற்றும் ஜெயந்தனின் வருகை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Wednesday, May 3, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மே தின பேரணியில் இரண்டு மில்லியன் மக்கள்!

 பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி மேதின கூட்டத்தினை நடத்தி முடிந்திருந்தது.
 
இந்நிலையில் காலிமுகத்திடலில் நேற்று நடத்தப்பட்ட மேதினக் கூட்டத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காலி கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் அரசாங்கத்திற்கு முக்கிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளதாக வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு சென்று பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு வந்தார் : பந்துல குணவர்தன!


இந்தியாவிற்கு சென்று பிரபாகரன் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு வந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நிதியமைச்சரின் கருத்துக்கு பதில் கூறுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர்,
மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றதில் இருந்து, நாட்டில் தொடர்ந்து வந்த 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கே பிரதான முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

பிரபாகரன் நாட்டை அழித்துக் கொண்டு வந்தார். அவர் தலைமையிலான விடுதலைப்புலிகள் நாட்டை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தன.

இவற்றிக்கு முடிவு கட்டுவதிலேயே மகிந்த குறியாக இருந்தார். அதன் படி யுத்தத்தையும் நிறைவுக்கு கொண்டு வந்தார் இதன் காரணமாக நாட்டின் அபிவிருத்தில் கவனம் செலுத்தவில்லை.
அது மட்டுமல்லாமல், புலிகள் விமான நிலையங்களை குண்டு வைத்து அழித்தனர். பிரபாகரன் இந்தியாவிற்கு சென்று ராஜீவ் காந்தியை கொன்று விட்டு வந்தார்.

இப்படியான ஓர் நிலை இலங்கையில் காணப்பட்டபோது எப்படி சர்வேச முதலீட்டாளர்கள் இலங்கை வருவார்கள். முதலீட்டாளர்கள் எவரும் இலங்கை வரவில்லை அனைவரும் பயத்தில் இருந்தார்கள் அதனால் யுத்த நிறைவே முக்கிய தேவையாக இருந்தது.

ஆனாலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்த காலகட்டத்திலும் மகிந்த நாட்டின் அபிவிருத்திக்காக பல சேவைகளைச் செய்து வந்துள்ளார் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை பந்துலவின் குறித்த கருத்துகளால் அமைச்சர் கபீர் ஹாசிம் எதிர்க்கருத்துகளைத் தெரிவிக்க, பைத்தியக்காரத்தனமான கருத்துகளை வெளியிட வேண்டாம் தெரிந்தவற்றை மட்டும் பேசுங்கள் என பந்துல ஆவேசமாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து துப்பாக்கிப் பிரயோகம் – விசாரணை அறிக்கை நாளை!

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை நாளை(04) கையளிக்கப்படவுள்ளது.
 
இதற்கமைய, நாளை பிற்பகல் 03.00 மணியளவில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சரிடம் குறித்த இந்த அறிக்கை வழங்கி வைக்கப்படும் என, குறித்த குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த பெப்ரவரி 27ம் திகதி காலை சிறைச்சாலை பேரூந்து மீது களுத்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது முக்கிய சந்தேகநபரான சமயங் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட ஏழ்வர் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த விடயம் குறித்து ஆராய, ரூமி மர்சுக் தலைமையில் மூவரடங்கிய குழுவொன்று, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சினால் நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 2, 2017

காலி முகத்திடல் சென்ற பா.உறுப்பினர்களால் ஸ்ரீ.சு.கட்சியில் பிளவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பிளவு நிலை ஏற்பட்டுள்ளதாகத் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாகவே இவ்வாறு பிளவு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
 
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு
மென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் ஒரு தரப்பு உறுப்பினர்கள்
யோசனையை ஆதரித்துள்ள நிலையில் மற்றுமொரு தரப்பினர் குறித்த இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
 
குறிப்பாக காலி முகத்திடல் மைதானத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின், உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை(03) கூட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத் திட்டம் காலிமுகத்திடலில் இருந்து ஆரம்பம் : மஹிந்த ராஜபக்ஷ!

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத் திட்டம் காலிமுகத்திடலில் இருந்து ஆரம்பித்துள்ளதாகவும் அதனை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:

அரசாங்கம் தற்போது தேசிய வளங்களை விற்றுவருகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துடன் 15,000 ஏக்கரை சீனாவுக்கு வழங்கவும், மாதுறு ஓய பிரதேசத்தில் காணியைப் பெற்றுக்கொடுக்கவும், திருகோணமலை துறைமுகத்தை விற்பதற்கும் அனைத்து திட்டங்களும் தயாராகியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

மக்களின் ஒரு பகுதியினர் அன்று ஏமாந்ததாலும், மீண்டும் ஏமாற தயாரில்லை என்றும், தேசிய வளங்களைப் பாதுகாக்க தேசியக் கொள்கையொன்றை ஏற்படுத்தி உறுதியான தொடர்ச்சியான போராட்டமாக முன்னெடுக்க வேண்டும். கடந்த காலத்தில் தனது அரசாங்கத்தை கவிழ்க்க 660 அமெரிக்க டொலர் செலவிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. சிலர் அதற்கான பணத்தை மலசலகூடங்களில் வைத்து வழங்கியதாக பிரதேச சபை உறுப்பினரொருவர் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

தன்னுடைய காலத்தில் முப்படைகளையும் உபயோகித்து பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தினேன். ஆனால் இந்த அரசாங்கம் கோரிக்கைகளை வென்றெடுக்கும்பொருட்டு பாதைக்கு வரும் மக்களை அடக்கவே முப்படைகளை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

குப்பை மலை சரிவடைந்து வீழ்ந்ததனால் மக்கள் மரணமடைந்த சம்பவம் உலகில் வேறெந்த நாட்டிலும் நடைபெறவில்லை. துரதிஷ்டவசமாக இந்நாட்டின் இது நடந்துள்ளது. குப்பையை அகற்ற வழியில்லாத அரசாங்கம் தனக்கு சவால் விடுப்பது நகைச்சுவையாக உள்ளது. இது ஜனநாயகத்தை பலப்படுத்தும் மே தினம். நாட்டை ஏலமிடும் விரயம்செய்யும் இந்த அரசாங்கத்தின் முடிவை தீர்மானித்து நாட்டை அழிக்கும் கள்வர்களை விரட்டி புதிய அரசாங்கத்துக்கு வழி அமைக்கும் மேதினமென்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

விமல், மஹிந்தானந்த, கம்மம்பில, நாமல் போன்றோருக்கும் எதிராக பொய்க் குற்றச்சாட்டுகள் முன்வைத்து அடக்குமுறையை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. எமது அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு திறமையானவர்களை துரத்தி பலவீனமானவர்களை நியமித்து வருகின்றனர்.

2015ல் மக்கள் வாக்களித்து நாட்டை விற்பதற்காகவா? அரசின் மோசடிகளால் கடன் சுமை உயர்ந்துள்ளது. சு. கவுக்கு வாக்களித்தவர்களை அரசாங்கம் காட்டிக்கொடுத்துள்ளது. குறைந்த எம்.பிக்கள் உள்ள கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. என்றும் அவர் தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் மக்கள் வெள்ளம்!


சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் அரசியல் கூட்டங்களில் மக்கள் வெள்ளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு எதிர்க் கட்சியின் காலிமுகத்திடல் மே தினக் கூட்டத்துக்கு நாட்டின் பல்வேறு புறங்களிலிருந்தும் மக்கள் வந்தனர்,
 
உயிர் கொடுத்து பாதுகாக்கப்பட்ட தேசிய வளங்கள் மற்றும் அரச சொத்துக்கள் என்பவற்றைப் பாதுகாக்கும் தேசிய கொள்கை கொண்ட அணியுடன் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல உழைக்கும் மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
தேசிய வளங்கள் பறிகொடுக்கும் யுகமொன்று  தற்பொழுது நாட்டில் ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
பழிவாங்கும் அரசியலிலிருந்து விடுபட்டு உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சமூக, பொருளாதார மாற்றமொன்றை உருவாக்க வேண்டியுள்ளது எனவும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

Monday, May 1, 2017

ஒட்டு மொத்த இலங்கையும் எனக்கு ஒரே தேர்தல் தொகுதியாகும் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

ஒட்டு மொத்த இலங்கையும் எனக்கு ஒரே தேர்தல் தொகுதியாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
காலி முகத் திடலில் இன்று நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட நேற்று சென்றிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்hறு பதிலளித்திருந்தார்.
அவர் மேலும் கூறுகையில்…
மே தினக் கூட்டத்தில் பங்கேற்கும் மக்களை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரச்சினைகளை சவால்களை எதிர்நோக்கி மேலும் தைரியமாக நாம் முன்நோக்கி நகர்வோம்.
அரசாங்கமும் அரசாங்கத் தரப்புக்களும் நகைச்சுவை வழங்கி வருகின்றது.அரசாங்கமொன்று மக்களுக்கு நகைச்சுவை வழங்கக்கூடாது.
 
காலி முகத் திடலிலிருந்து நாலா புறமும் பார்க்கும் போது கடந்த அரசாங்க ஆட்சிக் கால கட்டிட நிர்மாணங்களையே காண முடிகின்றது.
 
இந்த அரசாங்கம் அதனை அங்குரார்ப்பணம் செய்யவே முயற்சிக்கின்றது. காலி முகத் திடலின் எந்தவொரு மூலையில் மே தினக் கூட்ட மேடை அமைத்தாலும் அது அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசிய வளம் அரச சொத்துக்களை பாதுகாக்குமாறு மஹிந்த உழைக்கும் மக்களிடம் வேண்டுகோள்!

உயிர் கொடுத்து பாதுகாக்கப்பட்ட தேசிய வளங்கள் மற்றும் அரச சொத்துக்கள் என்பவற்றைப் பாதுகாக்கும் தேசிய கொள்கை கொண்ட அணியுடன் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல உழைக்கும் மக்களிடமும் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
 
தேசிய வளங்கள் பறிகொடுக்கும் யுகமொன்று தற்பொழுது நாட்டில் ஆரம்பமாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பழிவாங்கும் அரசியலிலிருந்து விடுபட்டு உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சமூக, பொருளாதார மாற்றமொன்றை உருவாக்க வேண்டியுள்ளது எனவும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று(01) அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.